இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர்!

சென்னை: சென்னையில் ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து, பலியான மாணவி ஸ்ருதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பேரணி சென்றனர். விபத்து நடந்த இடத்திலிருந்து முடிச்சூர் நோக்கி இந்த பேரணி நடைபெற்றது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுமி ஸ்ருதியின் உடல் முடிச்சூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேகமாக சென்ற பள்ளி பஸ் ஓட்டையிலிருந்து தவறி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பள்ளி பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு பிரனவ் (9), ஸ்ருதி (6) என்ற 2 குழந்தைகள். பிரனவ் அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ருதி 2ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ருதி தினமும் வீட்டில் இருந்து தந்தையின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து பள்ளி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து அப்பாவின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்த ஸ்ருதி, பின்னர் பள்ளி பஸ்சில் சென்றாள். மாலையில் வகுப்பு முடிந்த உடன் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பஸ்சில் 60 மாணவ, மாணவிகள் இருந்தனர்.

சேலையூரில் இருந்து முடிச்சூருக்கு புறப்பட்ட பள்ளி வாகனம் முடிச்சூர் இ.பி. காலனி பேருந்து நிறுத்தம் அருகே யு டர்ன் போட்டு வரதராஜபுரம் நோக்கி மின்னல் வேகத்தில் சென்றது. உள்ளே இருந்த மாணவிகள் தங்களுக்குள் சீட் மாறி விளையாடினர். அந்த பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்தது. பஸ் சென்ற வேகத்தில், சிறுமி ஸ்ருதி நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.
இதைக் கண்டு பஸ்சுக்குள் இருந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதை கவனிக்காமல் டிரைவர் சீமான் (58) பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர். வேகமாக சென்ற பஸ்சை வழிமறித்து தடுத்து நிறுத்தி, டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் அடங்காமல், குழந்தைகள் அனைவரையும் இறக்கிவிட்டு, பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர். தகவல் அறிந்து தாம்பரம், பீர்க்கன்கரணை போலீசார் சம்பவ இடம் விரைந்து மாணவியின் சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக தாம்பரம் , முடிச்சூர் சாலை, காஞ்சிபுரம் , தாம்பரம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பையை சேர்ந்த பஸ் டிரைவர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், பள்ளி தாளாளர் விஜயன் ஆகிய இருவரையும் பிடித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Image
இதற்கிடையில் தாம்பரத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து எரிந்து கொண்டிருந்த பஸ் தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடானது. பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி விழுந்தது எப்படி?

பஸ்சின் நடுவில் மிகப்பெரிய ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டையை சாதாரண பலகை வைத்து மூடியுள்ளனர். அது அசையாமல் இருக்க ஆணி ஏதும் அடிக்கவில்லை. யு டர்ன் அடித்து பஸ் வேகமாக சென்றபோது, அந்த பலகை விலகி விட்டது. பஸ்சுக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஸ்ருதி, நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார்.

பராமரிப்பு இல்லாத பள்ளி பஸ்

சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை அலுவலகம் சேலையூர் இந்திரா நகரில் உள்ளது. இந்த பள்ளி மாடம்பாக்கத்தில் மேல்நிலைப் பள்ளியாகவும், செம்பாக்கத்தில் உயர்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. சேலையூரில் ஆல்வின் மெமோரியல் என்ற பெயரில் சிபிஎஸ் பள்ளியாக இயங்குகிறது. இந்த பள்ளிகளில் கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், மேடவாக்கம், சந்தோஷ புரம், முடிச்சூர், மணி மங்கலம், படப்பை, வண்டலூர், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மாணவ, மாணவிகளை அழைத்து வர மற்றும் வீட்டில் கொண்டு விட பள்ளி பஸ், வேன், மினி வேன், டாடா மேஜிக் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. சில தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்தும் மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர். இதற்கு மாணவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. ஆனாலும் பஸ்களை சரியாக பராமரிப்பது இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாகன ஆய்வாளர் அலட்சியம்

விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளர் யோகேஸ்வரன். பெருங்களத்துரைச் சேர்ந்தவர். இவருக்கு சீயோன் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் 3 பஸ், 3 வேன் இயங்குகின்றன. விபத்துக்குள்ளான பஸ் எப்சி முடித்து 14 நாட்களே ஆகிறது என்று கூறப்படுகிறது. எப்சி செய்யும் போது மோட்டார் வாகன ஆய்வாளர் பஸ் சரியான கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று ஓட்டி பார்க்க வேண்டும். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே விபத்துக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது.

பள்ளி முன்பு போலீஸ் பாதுகாப்பு

சீயோன் மெட்ரிகுலேசன் பள்ளி பஸ் விபத்துக்குள்ளானதால், அந்த பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிடலாம் என்ற தகவல் கிடைத்ததால், அந்த பகுதியில் உள்ள 4 பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

போக்குவரத்து துறை ஆணையரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சேலையூரில் பள்ளி பஸ் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை மீறும்பட்சத்தில் போக்குவரத்து விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

”பள்ளி திறந்தவுடன் பள்ளி வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. சோதனையின் போது, வாகனங்களின் கியர் பாக்ஸ், பிரேக், இருக்கைகள், கண்ணாடிகள், லைட்டுகள், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்கிறார்களா.. என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வு நடத்தும் போது ஏதேனும் குறை இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

மேலும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால், பர்மிட் ரத்து செய்யப்படும். வாகனங்கள் இவ்வளவு ஆண்டுகள் தான் ஓட்ட வேண்டும் என்ற உத்தரவு இல்லை. ஆனால், வாகனங்களில் குறை இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது.” என்றும் அவர் கூறினார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி பேட்டி

பள்ளி பஸ்சில் இருந்து மாணவி தவறி விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கூறியதாவது: பெருங்களத்தூர் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம்: படப்பையில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது என் முன்னால் சென்ற பஸ்சில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தபோதுதான் அது குழந்தை என தெரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின்பக்க டயர் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. அதைப் பார்த்து நான் கூச்சலிட்டேன். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக போய்க் கொண்டிருந்தார். சாலையில் இருந்த அனை வரும் ஓடிச் சென்று பஸ்சை மறித்தனர். டிரைவரை வெளியே இழுத்து அடித்தனர். சிலர் குழந்தைகள் அனைவரையும் பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, பஸ்சுக்கு தீவைத்தனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊரூ.யர் தவமணி: என்னுடைய பைக்குக்கு பெட்ரோல் போட்டுவிட்டு திரும்பினேன். அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. ஓடிச் சன்று பார்த்தபோது பள்ளி குழந்தையின் மீது பேருந்தின் டயர் ஏறி இறங்கியிருந்தது. குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில், மூளை சிதறி இறந்து கிடந்தது.
சுரேஷ் (38): தனியார் பள்ளிகள் பணத்தில் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர். பேருந்தின் தரத்தை கவனிப்பதில்லை. இதனால், ஒரு குழந்தையின் உயிரே போய்விட்டது. பேருந்தை முறையாக பராமரிக்காத, பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கங்காதரன் (38): இந்த பிரச்னைக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கவில்லை. சம்பவ இடத்துக்கு யாரும் வரவில்லை. பஸ் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும், பஸ்சின் தரத்தை பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், கமிஷனுக்காக பஸ் பராமரிப்பு பற்றி அக்கறை காட்டாமல் இருந்துள்ளனர். கட்டணம் செலுத்த ஓரிரு நாட்கள் ஆனாலும், குழந்தைகளை வண்டியில் ஏற்றமாட்டார்கள். குழந்தைகளை சாலையில் விட்டு சென்றுவிடுவார்கள்.

குழந்தைசாமி (40): பள்ளி பஸ்சை டிரைவர்கள் கண்மூடித்தனமாக ஓட்டுகின்றனர். இந்த பஸ்சில் இருந்து குழந்தை கீழே விழுந்த பிறகும், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் சென் றார். பொதுமக்கள் அனைவரும் சத்தம் போட்ட பிறகு பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடிவிட்டார். பஸ்சை முறையாக பராமரிக்காத உரிமையாளர், அதனை கண்காணிக்காத பள்ளி நிர்வாகம் மற்றும் ஆர்டிஓ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன்: எங்கள் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த பகுதியில் காலை நேரங்களில் ஏராளமான பள்ளி பேருந்துகள் மற்றும் வாகங்கள் வந்து செல்கிறது. பேருந்துகளை சாலையின் நடுவிலேயே நிறுத்தி மாணவ, மாணவிகளை ஏற்றுவார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் நடைபெறும். பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றுகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி, வாகனங்களை ஓட்டுவதில்லை. வாகனங்களை சரியாக பராமரிப்பதில்லை. சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பதில்லை. ஆட்டுமந்தை போல பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகங்களை ஆர்டிஓ மற்றும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

முதல்வருக்கு அறிக்கை

‘‘பஸ்சில் இருந்து பள்ளிக் குழந்தை கீழே விழுந்து இறந்த சம்பவம் குறித்து அறிந்த மெட்ரிகுலேஷன் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சீயோன் பள்ளிக்கு சென்று அந்த பள்ளி நிர்வாகியிடமும் விசாரணை நடத்தினர். பள்ளி வாகனம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்துள்ளார்களா என்பது குறித்து நேற்று இரவு 10 மணி வரை கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு, அந்த அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார்.

மயங்கி விழுந்த தாய்

பலியான மாணவி ஸ்ருதி வீட்டு அருகே பள்ளி பஸ் வராது. எனவே, அவரது தந்தை தனது ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் செல்வார். மாலையில் அவரது அம்மா பிரியா கூட்டி செல்வார். நேற்று மாலை வழக்கம்போல மகளை அழைத்து வர பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, யாரோ ஒரு பள்ளி மாணவி விபத்தில் சிக்கி பலியானதாக தகவல் பரவியது. கடைசியில் இறந்தது மகள் ஸ்ருதிதான் என்பதை அறிந்ததும் தாய் பிரியா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

இந்த நிகழ்வுக்கு பின், வரும் காலங்களிலாவது மெத்தனமாக செயல்படும் பள்ளி நிர்வாகங்கள் திருந்தவேண்டும். பள்ளி வாகன பராமரிப்பில் மேலும் கண்டிப்பான அக்கறை காட்டி, ஸ்ருதி போன்ற இன்னுமொரு பிஞ்சு கூட பலியாகாமல் பாதுகாக்கவேண்டும்.

பகிர்வோம்…..! பாதுகாப்போம்…..!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s